ரஞ்சி கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய ரியான் பராக்!

Updated: Sun, Jan 14 2024 21:42 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர் ரியான் பராக். அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஒரே வீரரும் அவர் தான். இதன் காரணமாக ரியான் பராக் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் எதிர்பார்ப்புகளை ரியான் பராக் பூர்த்தி செய்யவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் அதிக விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட தொடர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இதன் காரணமாக இந்திய ஏ அணியில் ரியான் பராக்கிற்கு இடம் கிடைத்தது.

இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் ரியான் பராக் வெளுத்து கட்டி வருகிறார். ஏற்கனவே சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, மறுமுனையில் ஒற்றை ஆளாக நின்று ரியான் பராக் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய அவர் 87 பந்துகளில் 12 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 155 ரன்களை விளாசினார். தற்போது அசாம் அணி தனது 2ஆவது போட்டியில் கேரளா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி சச்சின் பேபியின் அபார சதத்தால் 419 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய அசாம் அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது களமிறங்கிய ரியான் பராக் பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்து கொண்டார். அதிரடியாக விளையாடிய அவர் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 125 பந்துகளில் 3 சிக்ஸ், 16 ஃபோர்ஸ் உட்பட 116 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் அசாம் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. அடுத்தடுத்து போட்டிகளில் ரியான் பராக் சதம் விளாசி இருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை