நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ராப் வால்டர் நியமனம்
நியூசிலாந்து அணி எதிர்வரும் ஜூலை மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரிலும், அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடர்களுக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆடவர் அணிக்கான புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த 2018அம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த கேரி ஸ்டீட்டின் பயிற்சிகாலம் முடிவடைந்ததையொட்டி, நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிவரும் ஜிம்பாப்வே தொடர் முதல் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ள ராப் வால்டர் 3 ஆண்டு இந்த பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைபட்ட காலத்தில் ஐசிசியின் முக்கிய தொடர்களான 2026 டி20 உலகக்கோப்பை, 2027 ஒருநாள் உலகக்கோப்பை, 2028 டி20 உலகக்கோப்பை மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் நியூசிலாந்து அணியில் விளையாடவுள்ளது.
இப்படியான சூழ்நிலையில் ராப் வால்டரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராப் வால்டர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில், அவரது தலைமையில் அந்த அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து பேசிய ராப் வால்டர், “நியூசிலாந்து அணி சமீப காலமாக உலக அரங்கில் வெற்றிகரமான மற்றும் மிகவும் மதிக்கப்படும் அணியாக இருந்து வருகிறது. அந்த அணியில் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையில் எனக்கு கிடைத்த பாக்கியமாகும். பல உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் பெரிய இருதரப்பு தொடர்களில், திறமையான வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் இணைந்த பணியாற்ற இது ஒரு அற்புதமான வாய்ப்பு.
Also Read: LIVE Cricket Score
எனது பணியைத் தொடங்குவதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இது உற்சாகமானது, சவாலானது, மேலும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது” என்று தெரிவித்துள்ளார். இதனால் இனி வரும் தொடர்களில் ராப் வால்டர் - மிட்செல் சான்ட்னரின் கூட்டணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.