ENG vs IND, 1st ODI: தவானை புகழ்ந்த ரோஹித் சர்மா!
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5ஆவது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி பும்ராவின் அற்புதமான பந்துவீச்சில் வீழ்ந்தது. அந்த அணி, 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் பும்ரா. ஷமி 3 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா 76, ஷிகர் தவன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “சூழலுக்கு ஏற்ப டாஸ் வென்று சரியான முடிவை எடுத்தோம். சூழலை சிறப்பாக பயன்படுத்தி கொண்டோம். ஆனால் எந்த சூழ்நிலை இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்படும் அளவிற்கு எங்களிடம் வீரர்கள் உள்ளனர். எங்கள் வீரர்கள் பந்துவீசுவதற்கு ஏற்ப நாங்கள் ஃபில்டர்களை நிறுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
ஷிகர் தவானும், நானும் நீண்ட நாட்களாக இணைந்து விளையாடுவதால் ஒருவரை ஒருவர் பற்றி நன்கு தெரியும். ஷிகர் தவான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். அவருடைய அனுபவம் நிச்சயம் அணிக்கு தேவை. நான் அடிக்கும் ஹூக் ஷாட்கள் ரிஸ்க் நிறைந்தவை என தெரியும். ஆனால் அதனால் ரன் கிடைக்கும் வரை எனக்கு மகிழ்ச்சியே” என்று தெரிவித்தார்.