வெற்றி தோல்வியை விட இளம் வீரர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா

Updated: Tue, Aug 02 2022 12:27 IST
Rohit Sharma Backs Indian Team After Losing The Second T20I Against West Indies (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.வ்இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று (1-8-22) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா (31), ரவீந்திர ஜடேஜா (27) மற்றும் ரிஷப் பண்ட் (24) ஆகியோரை தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 138 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி ஆல் அவுட்டானது. விண்டீஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஓபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்பின் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பிராண்டன் கிங் 68 ரன்களும், விக்கெட் கீப்பரான டீவன் தாமஸ் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரில் இலக்கை எட்டிய விண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், விண்டீஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம், வெற்றிக்கு தேவையான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை என்பதே உண்மை. ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது, நாங்கள் ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாடவில்லை. பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்து முயற்சிக்கும் பொழுது இது போன்ற தோல்விகளை சந்தித்து ஆக வேண்டும், இதை தவிர்க்க முடியாது. இது போன்ற போட்டிகளும், முயற்சிகளுமே நிறைய விசயங்களை கற்று கொடுக்கும். அனைவருக்கும் சரியான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். 

கடைசி ஓவரை புவனேஷ்வர் குமாரிடம் கொடுத்திருந்தால் அவர் 10 ரன்கள் விட்டுகொடுத்திருக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான், ஆனால் ஆவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் போன்றோருக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கும் அனுபவம் கிடைக்கும். இளம் வீரர்களையும் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆவேஸ் கானிடம் கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது. இது வெறும் ஒரு போட்டி தான், ஒரு தோல்வியால் எதுவும் மாறிவிடாது. 

வெற்றி தோல்வியை விட இளம் வீரர்களின் திறமைக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கான வாய்ப்பை வழங்குவதே முக்கியம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர், பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறியிருந்தால் விண்டீஸ் அணியால் இந்த இலக்கை 14 ஓவர்களுக்குள் எட்டியிருக்க முடியும். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தி போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்து வந்தனர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை