மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா; மோசமான சாதனைப் பட்டியளிலும் இடம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 46ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். கடைசியாக 53 பந்துகளில் 119 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போன்று ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிஷி தவான் முதல் ஓவர் வீசினார். இதில், 3ஆவது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் ரோஹித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி இதன் மூலமாக அதிக முறை டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இடம் பிடித்துள்ளார். இதுவரையில் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா 15 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதற்கு முன்னதாக 15 முறை அவுட்டானவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், மந்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.