சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா உலக சாதனை; கெயிலின் சாதனையும் முறியடிப்பு!
இந்திய அணி இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் டெல்லி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஷாகிதி 80 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார்.
இந்திய அணியின் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா பத்து ஓவர்களுக்கு நான்கு விக்கெட் கைப்பற்றி, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு அடுத்து இந்திய அணிக்கு தொடக்க தர ரோஹித் சர்மா மற்றும் இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர்கள் இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இவர்கள் இருவரது பேட்டிங்கும் மிக அபாரமாக இருந்தது. கடந்த போட்டியில் எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரை சதத்தைக் கடந்து சிறப்பாக விளையாட, இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப் நூறு ரன்களை கடந்தது.
தற்பொழுது ரோஹித் சர்மா நான்கு சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரராக உலக சாதனை படைத்திருக்கிறார். ரோகித் சர்மா 554 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் 553, ஷாஹித் அஃப்ரிடி 473, மெக்கலம் 398, மார்ட்டின் கப்தில் 383 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த போட்டியில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்திருக்கிறார். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவருக்கு உலக கோப்பையில் அதிவேக சதமாகவும், உலக கோப்பையில் இந்திய பேட்ஸ்மேனின் அதிவேக சதமாகவும் அமைந்திருக்கிறது.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர் என்ற உலக சாதனையையும் படைத்திருக்கிறார். அவருக்கு இது ஏழாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை சதம் ஆகும். இந்த ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகளை ரோஹித் சர்மா படைத்திருக்கிறார்.