மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷ்னா, ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்த ரோஹித் சர்மா புது சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி, இப்போட்டியில் ரோஹித் சர்மா 29 ரன்களைச் சேர்த்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 6000 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். அவருக்கு முன், எந்த மும்பை வீரரும் 4000 ரன்களை எட்டியதில்லை. இந்த பட்டியலில் கீரோன் பொல்லார்ட் 3915 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 3460 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்.
- ரோஹித் சர்மா - 6000 ரன்கள் (231* போட்டிகள்)
- கீரோன் போலார்டு - 3915 ரன்கள் (211 போட்டிகள்)
- சூர்யகுமார் யாதவ் - 3460 ரன்கள் (109* போட்டிகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக்(கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
இம்பாக்ட் வீரர்கள்: ஷுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே, குணால் சிங் ரத்தோர், யுத்வீர் சிங் சரக், குவேனா மபாகா
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
Also Read: LIVE Cricket Score
இம்பாக்ட் வீரர்கள்: ராஜ் பாவா, சத்தியநாராயண ராஜு, ராபின் மின்ஸ், ரீஸ் டாப்லி, கர்ண் ஷர்மா