ஷாஹீனை எதிர்கொள்ள ரோஹித்திற்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் டிராவிட்!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியே பெறாமல் இருந்த இந்திய அணி கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதே போல ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுடனான தோல்வி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. எனவே இந்த முறை அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும் என ரோஹித் சர்மாவின் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஆனால் அதில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் உள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சவாலாக உள்ளனர். கடந்தாண்டு ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கில் இந்தியாவின் டாப் 3 வீரர்கள் சரிந்தனர். சாம்பியன்ஸ் கோப்பையில் முகமது அமீரிடம் இந்திய வீரர்கள் சொதப்பினர். இதனால் இந்தாண்டு எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் சாஹீனை சமாளிக்க ரோஹித் சர்மாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து வருகிறார் ராகுல் டிராவிட். வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மாவுக்கு த்ரோ டவுன் பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதில் இடதுகை யில் வீசப்பட்டு, அதன் வேகத்தை ரோஹித் கணிக்க கற்றுக்கொண்டு வருகிறார். இதன் மூலம் சாஹீன் நேராக வீசினாலும் சரி, ரவுண்ட் தி விக்கெட்டில் வீசினாலும் சரி ரோஹித்தால் சமாளிக்க முடியும். கே.எல்.ராகுலுக்கும் இதே போன்ற பயிற்சி தான் கொடுத்து வருகின்றனர்.
பிரிஸ்பேனில் பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வந்த இந்திய அணி, மெல்பேர்ன் - க்கு சென்றடைந்துவிட்டது. இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு நல்ல ரெக்கார்ட் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமாக இருப்பதால் 200 வரை ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பவுலிங் மற்றும் சற்று கவலைக்கிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.