எங்கள் தனியுரிமை மீறப்படுகிறது - ரோஹித் சர்மா காட்டம்!

Updated: Sun, May 19 2024 18:31 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் ஐபிஎல்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. 

அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அணியின் கேப்டன் மாற்றம் தான் என பலரும் குற்றஞ்சாட்டி வருகிறது. ஏனெனில் மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டசியை பறித்து ஹர்திக் பாண்டியா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். 

இதன் காரணமாக அணிக்குள்ளேயே சில கருத்து வேறுபாடுகள் தெள்ளத்தெளிவாக காணப்பட்டது. அதிலும் அணியில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்ததும் தெரியவந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற முடியாமல் போனது. அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா இருவரது ஃபார்மும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் சமீபத்தில் ரோஹித் சர்மா, கேகேஆர் அணிக்கெதிரான போட்டியின் போது அந்த அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் பேசும் காணொளியானது இணையத்தில் தீயாய் பரவியது. இதைத்தொடர்ந்து ரோஹித், மும்பை அணி வீரர் தவால் குல்கர்னியுடன் பேசும்போது கேமராமேன் ரோஹித் பேசுவதைப் பதிவு செய்ய, ரோஹித் கேமராமேனைப் பார்த்து 'தயவு செய்து இங்கயும் வந்து எடுக்க வேண்டாம்' என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டிக் கேட்டிந்தார். 

அக்காணொளியும் இணையத்தில் வைரலான நிலையில், இன்று ரோஹித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைக்குள் கேமாராக்கள் அதிகமாக ஊடுருவி வருகிறது. நாங்கள் பயிற்சியின் போதும், போட்டியின் போதும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள், சக வீரர்களுடன் தனிமையில் பேசுவதைக் கூட அவர்கள் பதிவுசெய்து வருகிறார்கள்.

 

சமீபத்தில் கூட எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்ட போதும், அது நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறுவதாகும். பிரத்தியேகமான உள்ளடக்கத்தைப் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களை செய்தால், ஒரு நாள் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை அது உடைத்துவிடும்” என காட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை