ஜூலன் கோஸ்வாமியை பாராட்டிய ரோஹித் சர்மா!

Updated: Tue, Sep 20 2022 13:41 IST
Rohit Sharma on Indian pacer Jhulan Goswami (Image Source: Google)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி 39 வயதை எட்டியுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு ஓய்வை அறிவிப்பதாக இருக்கிறார். இந்திய மகளிர் அணிக்காக கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள், 202 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜுலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டில் 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அதோடு இந்திய மகளிர் அணிக்காக தொடர்ச்சியாக பல ஆண்டு காலம் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரமான இவர் வெகு விரைவில் ஓய்வு பெற இருப்பது குறித்து இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையை மேற்கொண்டிருந்தேன். அப்போது சிலமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அப்போதெல்லாம் பயிற்சியில் அவர் எனக்கு பந்து வீசி உள்ளார். அவரது இன் ஸ்விங் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்திய மகளிர் அணிக்கு அவர் செய்ததை வைத்து கூற வேண்டும் எனில் அவர் ஒரு பலமான வீராங்கனை.

அவரது விளையாட்டை பார்க்கும்போது இந்திய அணிக்காகவும், நாட்டுக்காகவும் எவ்வளவு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார் என்று தோன்றும். அவரது வயது பற்றி எனக்கு தெரியாது ஆனால் இன்றளவும் அவர் மிகச் சிறப்பாக ஓடிவந்து வேகமாக பந்து வீசி எதிரணியின் வீழ்த்துவதை பார்க்கும் போது அவர் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது.

இவரைப் போன்ற ஒரு வீராங்கனை இந்திய அணிக்கு கிடைப்பது என்பது அரிது. ஒரு தலைமுறைக்கு ஒருமுறை தான் இப்படிப்பட்ட நபர்கள் கிடைப்பார்கள். அவரது ஓய்விற்குப் பிறகு அவர்களது எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகிய இருவரும் இந்திய மகளிர் அணியை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்ற பெருமையை உடையவர்கள். தற்போதைய இந்திய மகளிர் அணி சிறப்பாக பயணிக்க இவர்கள் இருவரும் முக்கிய காரணம்” என பாராட்டினார். 

தற்போது நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தொடர் முடிவடைந்ததுமே ஜுலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை