‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Updated: Sat, Mar 09 2024 20:21 IST
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் இப்போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பது அவரிடம் நீங்கள் எப்போது ஓய்வை அறிவிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “காலையில் எழுந்ததும் எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருவதாக உணர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் இந்த கருத்து ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகிறது. கடந்த காலங்களில் சில ஆண்டுகளாக இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தி வரும் நிலையில், டி20 உலகக்கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் கோப்பையை வெல்லமுடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளது. 

 

இருப்பினும் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்தவுள்ளதால், நிச்சயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. முன்னதாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ரோஹித் சர்மா ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளா. இதனால் அவரால் நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரிலும் கோப்பையை வெல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக இருந்து வரும் ரோஹித் சர்மா தற்போது 36 வயதை எட்டியுள்ளார். அவர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 151 டி20 போட்டிகளில் விளையாடி 18ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் உள்பட 31 சதங்களையும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை