ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் தரக்கூடியது - ரோஹித் சர்மா!

Updated: Mon, Jun 05 2023 14:10 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், நியூசி. முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் மற்றும் இங்கிலாந்து ஜாம்பவான் இயான் பெல் ஆகியோர் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “பொதுவாக இங்கிலாந்து ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் தரக்கூடியது. நீங்கள் நன்றாக நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இங்கு ரன் சேர்க்க முடியும். இதற்கென்றே நீங்கள் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பவுலர்களை எதிர்கொள்ளும் நேரம் வரும்போது அந்த உள்ளுணர்வைப் பெறுவீர்கள்.

மேலும் இங்கு விளையாட உங்கள் பலம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நிறைய ரன் குவித்த வீரர்களின் மாடலை பின்பற்ற நான் முயற்சிக்கப் போவதில்லை. அதேசமயம் அவர்களின் ஸ்கோரிங் பேட்டர்னை தெரிந்து வைத்துக் கொள்வது சற்று நல்லதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஓவல் மைதானத்தில் நான் கண்டறிந்தது என்னவென்றால், இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியதாக உள்ளன. டி20 போட்டியிலிருந்து டெஸ்ட் வடிவத்திற்கு உடனடியாக மாறுவது சவாலாக உள்ளது. நீங்கள் பல ஃபார்மேட்-களில் விளையாடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மனதளவில் நீங்கள் அதற்காக உங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உங்களின் நுட்பத்தை மாற்றியமைக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே பேசிக்கொண்டு மனரீதியாக தயாராக வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 3-4 ஆண்டுகளில், நாங்கள் நல்ல நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அந்த நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் விளையாட விரும்பும் விதத்தில் அவர்களை ஆடவைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை