ஒருநாள் கிரிக்கெட்டில் சரித்திரம் படைக்கும் இந்தியா!

Updated: Tue, Feb 01 2022 14:46 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. முதல் ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இப்போட்டியில் இந்திய அணி தனது சரித்திர நிகழ்வுக்காக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இந்திய அணி விளையாடும் 1000ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக பார்க்கப்படும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த சரித்திர நிகழ்வு நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் நாடு என்ற பெருமையை இந்திய அணி பெறவுள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. அஜித் வடேகர் தலைமையில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வருத்தமாகவே தனது பயணத்தை தொடங்கியது.

எனினும் அன்றில் இருந்து 48 ஆண்டுகளில் இந்திய அணி 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 518 வெற்றிகளையும் 431 தோல்விகளையும் பெற்று வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 41 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி அதிக போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா : 958 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 936 போட்டிகளிலும் விளையாடியுள்ளன.

இந்தியா ஒவ்வொரு முறையும் மைல்கல்லை எட்டியபோது கேப்டன்சி செய்தவர்களின் பட்டியல்

  • 100ஆவது போட்டி : கபில் தேவ்
  • 200ஆவது போட்டி : முகமது அசாருதீன்
  • 300ஆவது போட்டி : சச்சின் டெண்டுல்கர்
  • 400 ஆவது போட்டி : முகமது அசாருதீன்
  • 500ஆவது போட்டி : சவுரவ் கங்குலி
  • 600ஆவது போட்டி : விரேந்தர் சேவாக்
  • 700ஆவது போட்டி : எம்எஸ் தோனி
  • 800ஆவது போட்டி : எம்எஸ் தோனி
  • 900ஆவது போட்டி : எம்எஸ் தோனி
  • 1000ஆவது போட்டி : ரோஹித் சர்மா*
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை