விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!

Updated: Tue, Mar 01 2022 10:49 IST
Image Source: Google

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் தீவிரமாக தயாராகிவருகிறது. அதற்காக, பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பல வீரர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். 

அந்தவகையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடாததால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தனக்கான இடத்தை பிடிக்க மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அபாரமாக விளையாடினார்.

முதல் டி20 போட்டியில் 28 பந்தில் 57* ரன்கள், 2ஆவது டி20 போட்டியில் 44 பந்தில் 74* ரன்கள், 3ஆவது டி20 போட்டியில் 45 பந்தில் 73* ரன்கள் என 3 டி20 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு போட்டியில் கூட அவுட் ஆகவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவுட்டே ஆகாமல் 3 அரைசதம் அடித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரான 3ஆம் வரிசையில் இறங்கி, 3 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடி தன்னை புறக்கணிக்க முடியாதபடி முத்திரை பதித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியின் சாதனையையும் முறியடித்தார்.

விராட் கோலியும் சூர்யகுமாரும் அணிக்குள் வந்துவிட்டால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விராட் கோலி ஓபனிங்கில் இறங்கினால் ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆம் வரிசையில் ஆட வாய்ப்பு கிடைக்கும். 

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக், “என்னை பொறுத்தமட்டில் விராட் கோலி ரோஹித்துடன் ஓபனிங்கில் இறங்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் 3ஆம் வரிசையில் ஆடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ரிஷப் பந்த் அல்லது கேஎல் ராகுலை 4 அல்லது 5ஆம் வரிசைகளில் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப இறக்கலாம். ஹர்திக் பாண்டியா ஃபிட்டாகிவிட்டால், அவரை 6ஆம் வரிசையிலும், ஜடேஜாவை 7ஆம் வரிசையிலும் ஆடவைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை