இன்னும் ஒருசில விக்கெட்டுகள் எடுத்திருந்தால் போட்டி எங்கள் பக்கம் வந்திருக்கலாம் - ரோஹித் சர்மா!

Updated: Sun, Nov 19 2023 22:48 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்து 47 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பேட்டிங்கில் கடுமையாக திணறினர். 

பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 54 ரன்களும், கே.எல் ராகுல் 66 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதன்பின் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (7), மிட்செல் மார்ஸ் (7) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (4) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அதன்பின் கூட்டணி சேர்ந்த டிராவிஸ் ஹெட் – மார்னஸ் லபுஷாக்னே ஜோடி, இந்திய வீரர்களுக்கு சிறிய வாய்ப்பு கூட கொடுக்காமல் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

களத்தில் நங்கூரமாக நிலைத்து நின்று தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றி கனவையும் கலைத்தார். டிராவிஸ் ஹெட்டிற்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய லபுஷாக்னே 110 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 43ஆவது ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

இந்நிலையில் பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்த தாங்கள் எந்தத் துறையிலும் போதுமான அளவுக்கு அசத்தாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “முடிவு எங்கள் வழியில் செல்லவில்லை. நாங்கள் இன்று போதுமானதாக விளையாடவில்லை. எங்களால் முடிந்தளவுக்கு முயற்சித்தும் முடியவில்லை.

20 – 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராகுல் மற்றும் விராட் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 270 – 280 ரன்கள் எடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் இடையே விக்கெட்டுகளை தொடர்ந்து விட்டோம். மேலும் 240 ரன்கள் மட்டுமே நீங்கள் எடுத்த போது விக்கெட்டுகளை எடுக்க விரும்புவீர்கள். ஆனால் அங்கே ஹெட் – லபுஸ்ஷேன் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்

நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம். ஆனால் இரவு நேரத்தில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சற்று சிறப்பாக இருப்பதது. அதை சாக்காக சொல்லவில்லை. நாங்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் இன்னும் ஒருசில விக்கெட்டுகள் எடுத்திருந்தால் போட்டி எங்கள் பக்கம் வந்திருக்கலாம். இருப்பினும் அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த எதிரணியினருக்கு பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை