ஸ்லோ ஓவர் ரேட்; மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
பாகிஸ்தான் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் தற்போது வரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டுலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது அறிவித்துள்ளது.
நடப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு 10 சதவீத அபராதமும், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு 5 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்சமயம் மீண்டும் அந்த அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து ஐசிசியின் அபராதத்தைப் பெற்றுள்ளது. மேற்கொண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தொடர் தோல்வியை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி தற்போது ஐசிசியின் அபராதத்தையும் பெற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
நியூசிலாந்து ஒருநாள் அணி: டாம் லாதம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், நாதன் ஸ்மித், வில் யங்
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்