உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!

Updated: Thu, Oct 12 2023 12:43 IST
Image Source: Google

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இதில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. உலகக்கோப்பையில் அந்த அணியின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹுத் சர்மாவும், இஷான் கிஷனும் களம் புகுந்தனர். ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த ரோஹித் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலத்தில் மிதக்க வைத்தார். 

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் அவரது 31ஆவது சதமாக பதிவானது. மேலும் இப்போட்டியில் 16 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 131 ரன்களில் ரஷித்கானின் சுழலில் போல்டு ஆனார். இறுதியில் கோலியின் பவுண்டரியுடன் இன்னிங்ஸ் சுபமாக முடிவுக்கு வந்தது. 

இதன்மூலம் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. விராட் கோலி 55 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (30 சதம்) பின்னுக்கு தள்ளியுள்ளார். இப்பாட்டியளில் சச்சின் டெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (47 சதம்) ஆகியோரைத் தொடர்ந்து ரோஹித் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

அதுமட்டுமின்றி உலகக்கோப்பை தொடர்களில் அதிக சதங்களை விளாசிய வீரர், அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர், அதிவேகமாக சதமடித்த வீரர், சேஸிங்கிங் போது அதிக ரன்களை அடித்த வீரர், ஃபவர் பிளேவில் அதிக ரன்கள் விளாசிய வீரர், கேப்டனாக அதிக வயதில் சதமடித்தவர் போன்ற சாதனைகளையும் ரோஹித் சர்மா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை