ரோஹித் சர்மாவின் பலமே அவரது பலவீனமாக மாறியுள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Wed, Dec 27 2023 11:42 IST
ரோஹித் சர்மாவின் பலமே அவரது பலவீனமாக மாறியுள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக விளையாடி முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஷ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தனர். இதனால் 200 ரன்கள் தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்த போதிலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்ற போராடி வருகிறார்.

முன்னதாக நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் 597 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இந்தியா இறுதிப்போட்டி வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்த தொடரிலும் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் 5 ரன்கள் எடுத்திருந்த போது ககிஸோ ரபாடா வேகத்தில் கேட்ச் கொடுத்து அவுட்டான அவர் ரசிகர்களுக்கும் இந்தியாவுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட ரபாடா வீசிய பவுன்சர் பந்தில் தமக்கு மிகவும் பிடித்த ஃபுல் ஷாட் வாயிலாக சிக்சர் அடிக்க முயற்சித்த அவர் தவறாக கணித்து கேட்ச் கொடுத்து அவுட்டானது ரசிகர்களுக்கு வியப்பாகவும் அமைந்தது.

ஏனெனில் புல் ஷாட் அடிப்பதில் கில்லாடியான ரோஹித் சர்மா அதை அதிகமாக அடித்தே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஒருநாள், டி20 போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் பலமாக இருக்கும் ஃபுல் ஷாட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரியாக அமைந்துள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இது அவருக்கு மிகவும் பிடித்த ஷாட். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்த ஷாட்டை அடித்து தான் அவர் எதிரணிகளை பின்னோக்கி நடக்க வைப்பார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவே அவருக்கு எதிரியாக இருக்கிறது. சொல்லப்போனால் கடந்த 2 வருடங்களில் அவர் ஃபுல் ஷாட் வாயிலாக 7 முறை அவுட்டாகியுள்ளார். இந்த சமயத்தில் நீங்கள் அவரை அவுட்டாக்கிய பவுலருக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை