நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராஸ் டெய்லர். இவர் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை நியூசிலாந்துக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7684 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 236 ஒருநாள் போட்டிகளில் 8607 ரன்களையும், 102 டி20 போட்டிகளில் 1909 ரன்களையும் குவித்துள்ளார்.
 
மேலும் ஐபிஎல்லில் 2008ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ராஸ் டெய்லர், அபாரமாக பேட்டிங் செய்து அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்தார். அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட ரோஸ் டெய்லர், "Ross Taylor: Black & White" என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். சுயசரிதையில் உண்மைகளை மட்டுமே எழுதவேண்டும் என்பதால், தனது கெரியரில் நடந்த அனைத்து சம்பவங்களையும் உண்மையாக எழுதியுள்ளார்.

Advertisement

இதில் அவர் ஐபிஎல் குறித்து குறிப்பிட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது, ஒரு போட்டியில் டக் அவுட்டானபோது, ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். ரோஸ் டெய்லர் 2011ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ள ராஸ் டெய்லர், “அதிகமான பணத்தை வீரர்களுக்கு ஊதியமாக கொடுத்து ஒப்பந்தம் செய்யும் அணிகளுக்கு, அந்த வீரர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பது இயல்புதான். அந்த தொகைக்கு தகுதியானவர் தான் என்று நிரூபிக்க வேண்டிய கடமை வீரர்களுக்கும் உள்ளது. ஆர்சிபி அணிக்காக நன்றாக ஆடினேன். அந்த அணிக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. அதுவே ஒரு புதிய அணிக்கு ஆடும்போது அந்த வசதிகள் எல்லாம் இருக்காது. 2-3  போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் ஓரங்கட்டப்படும் வாய்ப்புள்ளது.

நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக மொஹாலியில் நடந்த போட்டி ஒன்றில், 195 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, நான் ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினேன். அதன்பின்னர், ஹோட்டலின் டாப் ஃப்ளோரில் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர் அனைவரும் இருந்தனர். 

லிஸ் ஹர்லி ஷேன் வார்னுடன் இருந்தார். அப்போது, அணி உரிமையாளர்களில் ஒருவர், ரோஸ்(டெய்லர்) நீங்கள் டக் அவுட்டாவதற்காகவா நாங்கள் கோடிகளை கொட்டிக் கொடுக்கிறோம் என்று கேட்டு என் கன்னத்தில் 3-4 அறைகளை விட்டார்” என்று கூறியிருக்கிறார். இச்சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News