வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பாவேல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸ் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்சமயம் 33 வயதான ரோஸ்டன் சேஸ் கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதன்பின் தற்போது வரை அவர் எந்த டெஸ்ட் போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில் அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இதுதவிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவிகளுக்கான தேர்வில் ஜான் கேம்பல், டெவின் இம்லாக், ஜோசுவா டா சில்வா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேசமயம், தற்போதைய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் ஷாய் ஹோப் டெஸ்ட் கேப்டன் பதவியை மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
ரோஸ்டன் சேஸ் குறித்து பேசினால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுநாள் வரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்களையும், பந்துவீச்சில் 4 ஐந்து விக்கெட் ஹாலுடன் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதன் காரணமாக எதிவரும் தொடர்களில் அவரது தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.