கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோவ்மன் பாவெல்!

Updated: Sun, Jul 27 2025 17:24 IST
Image Source: Google

Most T20I Runs For West Indies: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து ரோவ்மன் பாவெல் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களையும், ரோவ்மன் பாவெல், ஷெஃபெர்ட் தலா 28 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 51 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அந்த அணி வீரர் ரோவ்மன் பாவெல் சிறப்பு சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 28 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளர். 

முன்னதாக கிறிஸ் கெயில் 75 இன்னிங்ஸில் 1899 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் ரோவ்மன் பாவெல் 87 இன்னிங்ஸ்களில் 1925 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரன் 97 இன்னிங்ஸ்களில் 2,275 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 ரன்கள்

  • 2,275 - நிக்கோலஸ் பூரன் (97 இன்னிங்ஸ்)
  • 1,925* - ரோவ்மேன் பவல் (87 இன்னிங்ஸ்)
  • 1,899 - கிறிஸ் கெய்ல் (75 இன்னிங்ஸ்)
  • 1,782 - எவின் லூயிஸ் (64 இன்னிங்ஸ்)
  • 1,648 - பிராண்டன் கிங் (65 இன்னிங்ஸ்)
  • 1,611 - மார்லன் சாமுவேல்ஸ் (65 இன்னிங்ஸ்)
  • 1,569 - கீரோன் பொல்லார்ட் (83 இன்னிங்ஸ்)
Also Read: LIVE Cricket Score

இது தவிர, இப்போட்டியில் இரண்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் ரோவ்மன் பாவெல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நிக்கோலஸ் பூரன் 149 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், எவின் லூயிஸ் 136 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில், ரோவ்மன் பாவெல் 125 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை