IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் 3வது போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி 27, 29 மற்றும் ஃபிப்ரவரி 1ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையும் இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் சேர்க்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் மீண்டும் இளம் படை களமிறங்கவுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் ருதுராஜ் கெயிக்வாட் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ருதுராஜ் கெயிக்வாட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குணமாக சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதாலும் இத்தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள என்.சி.ஏ அதிகாரிகள், ருதுராஜுக்கு ஸ்கேன்கள் எடுக்கவுள்ளோம். அதற்கேற்றார் போல அவரின் தேர்வு இருக்கும் எனக்கூறியுள்ளனர்.
ருதுராஜ் கெயிக்வாட்டை போலவே நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் பெங்களூருவில் தான் உள்ளனர். மிகவும் குறைவான வாய்ப்புகளை பெற்று வரும் இவர்கள், இப்படி காயம் எனக்கூறி விலகுவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ருதுராஜுக்கு இந்த தொடரில் மாற்று வீரர் அறிவிக்கப்படாது எனத்தெரிகிறது. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கனவே பிரித்வி ஷா, இஷான் கிஷான், ஷுப்மன் கில், தீபக் ஹூடா என 4 ஓப்பனிங் வீரர்கள் இருக்கின்றனர். எனவே கெயிக்வாட்டிற்கு மாற்றாக ஒரு பந்துவீச்சாளர் சேர்க்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.