SA vs IND: ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு!

Updated: Sat, Dec 23 2023 19:13 IST
SA vs IND: ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி அங்கு நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்து, அடுத்ததாக நடந்த ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட வலுவான இந்திய அணி களமிறங்குகிறது.

இதனால் இம்முறையாவது தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதிக்குமா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த நிலையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியிலிருந்து தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டியில் காயத்தை சந்தித்த அவர் 3ஆவது போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் அவரது வலது கை விரலில் சந்தித்த காயத்தை சோதித்ததில் குணமடைவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்று முடிவுகள் வெளியானதாக தெரிகிறது. இதனால் இத்தொடரிலிருந்து ருத்ராஜ் விலகுவதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2 வருடங்களாக இதேபோல பல தொடர்களில் இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் யாராவது காயமடைந்து வெளியேறினால் அந்த இடத்தை பெயருக்காக நிரப்பக்கூடிய ஒரு வீரராகவே அபிமன்யூ ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இருந்து வருகிறார். 

அந்த வரிசையில் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களா களமிறங்குவார் என்பதால் இத்தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ஒருவேளை ருதுராஜுக்கு பதிலாக முதன்மை அணியில் தேவைப்பட்டால் உடனடியாக சேர்ந்து கொள்ளும் வகையில் அபிமன்யூ ஈஸ்வரன் பெயரை மாற்று வீரராக பிசிசிஐ அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை