ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!

Updated: Tue, Nov 28 2023 22:17 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் மூன்றாவது போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். 

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய இஷான் கிஷன் ஒரு ரன் கூட எடுக்காமலும், அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களத்திற்கு வந்த திலக் வர்மாவுடன் கூட்டணி சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட், ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வியூகங்களையும் உடைத்தெறிந்து தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 

முதல் 21 பந்துகளில் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்த 36 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, மொத்தமாக 57 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் குவித்து கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 222 ரன்கள் குவித்துள்ளது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ருத்துராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை யாருமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை