காயத்தில் இருந்து மீண்ட ஜேக்கப் பெத்தெல்; மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்!

Updated: Fri, Mar 07 2025 12:51 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தல் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ஜேக்கப் பெத்தெல், அத்தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். மேற்கொண்டு அவரின் காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்தும் விலகினார். இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் தான் அவர் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஆர்சிபி அணிக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவும் உள்ளது. முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற வீரர்கள் மெகா ஏலத்தின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜேக்கப் பெத்தெலை ரூ.2.60 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அதிலும் குறிப்பாக அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்தது. 

தற்போது 21 வயதான பெத்தேல் இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திரமாக கருதப்படுகிறார். இந்த இளம் ஆல்ரவுண்டர் இங்கிலாந்து அணிக்காக கடந்தாண்டு மூன்று வடிவங்களிலும் அறிமுகமானார். அதன்படி அவர் இதுவரை 3 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடதக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை