தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!

Updated: Wed, Dec 20 2023 13:09 IST
Image Source: Google

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது, 42.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்த ஒருநாள் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பாக அந்த அணியின் தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸி 119 ரன்களை குவித்து அசத்தினார். இந்திய அணி சார்பாக சாய் சுதர்ஷன் 62 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு கடினமாகவே இருந்தாலும் எங்களது அணியின் தொடக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் கொடுத்த அடித்தளம் எங்களை வெற்றியை நோக்கி எளிதாக அழைத்துச் சென்றது. மேலும் இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மைதானத்தில் 300 ரன்களை அடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு டீசன்டான ஸ்கோரை எடுத்திருந்தால் கடினமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனாலும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியினரை கட்டுப்படுத்தினர். தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது. எங்களது அணியின் தொடக்க வீரரான ஸோர்ஸி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸையும் சரியாக கட்டமைத்து சதம் அடித்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி. இன்னும் சிறப்பான ஆட்டம் அவரிடம் இனியும் தொடரும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை