தென் ஆப்பிரிக்காவில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ டிவி-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலுமே வென்றாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வந்துவிட்டது. எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் இந்திய அணி களமிறங்கும்போது, சிறப்பாக விளையாடி வென்றிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் சவாலானது. அத்துடன், தென் ஆப்பிரிக்க வீரர்களும் தங்களது சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடுவர். நம்முடைய சிறந்த பங்களிப்பை நாம் தரவேண்டும் என்பதை நம் வீரர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வெற்றிக்கான வாய்ப்பு உண்டு; ஆனால், அது மிக எளிதல் கிட்டிவிடாது.
விராட் கோலியின் வளர்ச்சி ஆச்சரியமானது. அவர் தனது முதல் போட்டியில் அறிமுகமானபோது, அவருடன் பேட்டிங் களத்தில் இருந்தேன். ஒரு கிரிக்கெட் வீரராகவும், தனி மனிதராகவும் அவரது 10 ஆண்டு கால வளர்ச்சி என்பது தனித்துவமானது" என்று தெரிவித்துள்ளார்.