தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி , தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது. 

Advertisement

இதையடுத்து தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ந்து அசத்தினார். அதன்பின் 64 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் வர்னருடன் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 20ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 106 ரன்களை எடுத்திருந்த டேவிட் வார்னர் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் லபுஷாக்னேவுடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் மார்னஸ் லபுஷாக்னே தனது 2ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ஜோஷ் இங்கிலிஸும் தனது அரைசதத்தைக் கடந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியும் 40 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது.

இதையடுத்து 50 ரன்களில் ஜோஷ் இங்கிலிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் ஒரு ரன்னிலும், மறுபக்கம் 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 124 ரன்களைச் சேர்த்திருந்த மார்னஸ் லபுஷாக்னேவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 392 ரன்களை குவித்தது. 

Advertisement

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்த முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் டிக் காக் 45 ரன்களிலும், டெம்பா பவுமா 46 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டூசென் 17 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 3 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றத்தைச் சந்திதது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹென்ரிச் கிளாசென் 49 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 49 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா, பெஹ்லுக்வாயோ, ஆன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஸம்ஸி ஆகியோரால் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், சீன் அபேட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது. 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News