தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 453 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கேஷவ் மஹாராஜ் 84 ரன்களையும், டீன் எல்கர் 70 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச தரப்பில் முஷ்பிக்கூர் ரஹிம் 30 ரன்களுடனும், யசிர் அலி 8 ரன்களுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த யாசிர் அலி 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அடுத்து களமிறங்கிய வீரர்களும் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 74.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே அடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர், ஹர்மர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 236 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் டீன் எல்கர் 41 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் வங்கதேச அணி வெற்றிக்கு 413 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி கடின இலக்கை துரத்திய வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால், ஹொசைன் சாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. இப்போட்டியில் இன்னும் இரண்டு நாள்கள் முழுமையாக உள்ளதால், தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.