SA vs ENG, 3rd ODI: பட்லர், மாலன் அபார சதம்; கடின இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

Updated: Wed, Feb 01 2023 21:29 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய், பென் டக்கெட், ஹாரி ப்ரூக் ஆகியோர் அடுத்தடுத்து லுங்கி இங்கிடியின் பந்துவீச்சில் ஆடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி வெறும் 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மாலன் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின்னர் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோஸ் பட்லர் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து டேவிட் மாலனும் சதமடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைக் கடந்தது. அதன்பின் 118 ரன்களில் டேவிட் மாலன் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடி காட்டிய மொயீன் அலியும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 127 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 131 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை