பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது இந்தியா!

Updated: Thu, Dec 30 2021 16:41 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4ஆம் நாள் முடிவில் தெ.ஆ. அணி, 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பேட்டர்களான டீன் எல்கரும் பவுமாவும் பெரிய சவாலாக இருந்தார்கள். எல்கர் அளித்த ஒரு கேட்ச்சை பந்துவீசிய ஷமி தவறவிட்டார். 156 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் எடுத்த எல்கரை எல்பிடபிள்யூ செய்து வீழ்த்தினார் பும்ரா. 10 ஓவர்களுக்குப் பிறகு விக்கெட் விழுந்ததால் இந்திய ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள். 

அடுத்து வந்த டி காக் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார். அவரை அற்புதமான பந்துவீச்சினால் போல்ட் செய்தார் சிராஜ். வியான் முல்டர் 1 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளையில் தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தவிர்க்கப் போராடியது. ஆனால் உணவு இடைவேளை முடிந்த இரண்டே ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் அஸ்வின் வீசிய ஓரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இதனால் 191 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை