SA vs IND, 1st Test: டீன் எல்கர் அசத்தல் சதம்; முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தோடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், ஷுப்மன் கில் 2 ரன்களிலும் என அறிமுக வீரர் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்கோ ஜான்சென் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தவறவிட தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் வாய்ப்பும் கைநழுவியது.
சிறப்பாக விளையாடிய இருவரும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும், விராட் கோலி 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய அஸ்வின், ஷர்தூல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய தரப்பில் ராகுல் 70 ரன், சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும் தொடங்கினர்.
இதில் முகமது சிராஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 14 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 101 ரன்களை எடுத்திருந்த கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழந்தார்.இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த டீன் எல்கர் - டோனி டி ஸோர்ஸி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டீன் எல்கர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த டோனி டி ஸோர்ஸி 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கீகன் பீட்டர்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்ட இழப்பை தடுத்தார். அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டீன் எல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மறுபக்கம் சிறப்பாக விளையாடி அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த பெடிங்ஹாம் 7 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கைல் வெர்ரையன் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து டீன் எல்கருடன் மார்கோ ஜான்சென் இணைந்தார். அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டீன் எல்கர் 140 ரன்களுடனும், மார்கோ ஜான்சென் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 11 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.