SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!

Updated: Wed, Dec 27 2023 14:45 IST
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தோடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், ஷுப்மன் கில் 2 ரன்களிலும் என அறிமுக வீரர் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்கோ ஜான்சென் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தவறவிட தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் வாய்ப்பும் கைநழுவியது. 

சிறப்பாக விளையாடிய இருவரும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும், விராட் கோலி 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய அஸ்வின், ஷர்தூல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய தரப்பில் ராகுல் 70 ரன், சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும் தொடங்கினர். 

இதில் முகமது சிராஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 14 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 101 ரன்களை எடுத்திருந்த கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை