பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் தாமதமாகும் இரண்டாம் நாள் ஆட்டம்!

Updated: Mon, Dec 27 2021 15:59 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா மிக வலுவான நிலையில் உள்ளது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்தனர். இதன் பின்னர் வந்த புஜாரா டக் அவுட், விராட் கோலி 35 ரன்களுக்கு வெளியேறினாலும் மறுமுனையில் நின்றிருந்த கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்டில் அவர் அடிக்கும் 7ஆவது சதம் இதுவாகும்.

ராகுலுக்கு உறுதுணையாக நின்று விளையாடிய அஜிங்கியா ரஹானே 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ரிஷப் பந்த், அஸ்வின், ஷர்துல் என நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 400+ ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த எதிர்பார்ப்புகளுக்கு வானிலை ஆப்பு வைத்துள்ளது. போட்டி நடைபெற்று வரும் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. வானிலை தொடர்ந்து மோசமாக இருந்து வருவதால், போட்டி தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று முழுவதும் மழைப்பெய்து ஆட்டம் ரத்துப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினமும் மேகமூட்டங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை