SA vs IND, 2nd ODI: ரிஷப், ராகுல் அதிரடியில் இந்திய அணி 287 ரன்களைச் சேர்த்தது!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியது தென் ஆப்பிரிக்க அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் பாா்ல் நகரில் நடைபெற்று வரும் 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சென்னுக்குப் பதிலாக மகாலா இடம்பெற்றார்.
11 ஓவர்கள் வரை இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுலும் ஷிகர் தவனும் நன்கு விளையாடி 58 ரன்கள் சேர்த்தார்கள். 12ஆவது ஓவரில் மார்க்ரம் பந்தில் வேகமாக ஷாட் அடித்த ஷிகர் தவன், பவுண்டரி அருகே கேட்ச் கொடுத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு வந்த விராட் கோலி, 5 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் மஹாராஜா பந்தில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். 2020-க்குப் பிறகு முதல்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார் விராட் கோலி.
இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. அப்போது ஒரு அருமையான ரன் அவுட் வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. ரன் எடுக்க முயலும்போது தவறு செய்ததால் பந்த், ராகுல் என இருவருமே ஒரே முனையில் இருந்தார்கள். அப்போதும் ரன் அவுட் செய்ய முடியாமல் தடுமாறி நல்ல வாய்ப்பை வீணாக்கியது தென் ஆப்பிரிக்க அணி.
இந்த நேரத்தில் இன்னொரு விக்கெட் விழுந்தால் என்ன ஆகுமா என இந்திய ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் ரிஷப் பந்த், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ராகுல் நிதானமாக ஆடியபோது இவர் அடிக்கடி பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 56 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 43 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் ரிஷப் பந்த்.
பின் 28.2 ஓவர்களில் 164/2 என ஸ்கோர் இருந்தபோது 94 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணியைப் பூர்த்தி செய்தார்கள் ரிஷப் பந்தும் கே.எல். ராகுலும்.
71 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கே.எல். ராகுல். அதன்பின் 55 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 85 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் ஷர்துல் தாக்கூர் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.