SA vs IND, 2nd T20I: சிக்சர் மழை பொழிந்த பேட்டர்ஸ்; இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடியில் இருவரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் இணைந்த திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யாவுடன் இணைந்த ரிங்கு சிங் முதல் பந்திலிருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் கேப்டன் இன்னிங்ஸை விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுப்பக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதில் இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களை எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், ஐடன் மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - மேத்யூ ப்ரீட்ஸ்கீ இணை தொடக்கம் கொடுத்தனர். இன்னிங்ஸின் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரிகளை விளாசிய இந்த இணை முதல் ஓவரில் 18 ரன்களையும், இரண்டாவது ஓவரில் 20 ரன்களையும் விளாசி மிரட்டினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ப்ரீட்ஸ்கீ 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரீஸா ஹென்றிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லரும் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - பெஹ்லுக்வாயோ இணை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.