SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!

Updated: Wed, Jan 03 2024 19:58 IST
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கி (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டனர். அதன்படி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா அணி. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர்.

இன்னிங்ஸின் 3.2ஆவது ஓவரில் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், 5.3ஆவது ஓவரில் டீன் எல்கரை போல்ட் செய்து வெளியேற்றினார். பும்ரா தன் பங்கிற்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸை விக்கெட்டை எடுத்தார். பும்ரா விக்கெட் வீழ்த்திய அடுத்த ஓவரிலேயே டோனி ஸோர்ஸி அவுட்டாகி ஷாக் கொடுத்தார். தொடர்ந்து கைல் வெர்ரைன் உடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற டேவிட் பெடிங்காமை 12 ரன்களுக்கும், கடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தலைவலியாக இருந்த மார்கோ யான்சனையும் பூஜ்ஜியத்திலும், கைல் வெர்ரைனை 15 ரன்களுக்கும் நடையை கட்ட வைத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியை தடுமாற வைத்தார் சிராஜ்.

இதனால், தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. 9 ஓவர்களை மட்டும் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார் சிராஜ். இதன்பின் பந்துவீச வந்த முகேஷ் குமார் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். 3 ரன்கள் எடுத்திருந்த கேசவ் மகராஜ்ஜை முகேஷ் குமார் ஆட்டமிழக்க செய்ய, நந்த்ரே பர்கரை 4 ரன்களில் பும்ரா வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக ரபாடாவின் விக்கெட்டை முகேஷ் குமார் வீழ்த்தினார். இதனால் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. 

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இன்றைக்கு பந்துவீசினர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முன் தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினர். இதில் பிரசித் கிருஷ்ணா மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா 39 ரன்களிலும், ஷுப்மன் கில் 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் களமிறங்கிய விராட் கோலி வழக்கம்போல் தனது பணியை செய்ய மறுபக்கம் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அப்போது இன்னிங்ஸின் 34ஆவது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி வீசினார். 

 

அதனை எதிர்கொண்ட கேஎல் ராகுல் அடிக்க முயன்று 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரையும் அதே ஓவரில் வீழ்த்தி லுங்கி இங்கிடி கம்பேக் கொடுத்தார். இதையடுத்து அடுத்த ஓவரை வீசிய காகிசோ ரபாடா, அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த விராட் கோலி 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் வந்த சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் அதே ஓவரில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் அடுத்து 6 விக்கெட்டுகளில் எந்த ஒரு ரன்னையும் எடுக்கமால் விக்கெட்டை இழந்தது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஸ்கோரில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணி எனும் மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை