SA vs IND, 2nd Test: ஐடன் மார்க்ரம் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு!

Updated: Thu, Jan 04 2024 15:48 IST
Image Source: Google

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்நிலையில், 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. டீன் எல்கர் 12 ரன்னும், டி ஸோர்ஸி ஒரு ரன்னும், ஸ்டப்ஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2ஆவது இன்னிங்சில் 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஐடன் மார்க்ரம் 36 ரன்னுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 7 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் பெட்டிங்ஹாம் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்சென் 11 ரன்களிலும், கேசவ் மகாராஜ் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு முன்னிலையையும் பெற்றுக்கொடுத்தார். பின் 17 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 106 ரன்களை எடுத்திருந்த மார்க்ரம் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய காகிசோ ரபாடா 6 ரன்களிலும், லுங்கி இங்கிடி 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை