SA vs IND, 3rd T20I: ஜான்சன், கிளாசென் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மீண்டும் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ரமந்தீப் சிங் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இரண்டாவது விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்த கையோடு அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்த கையோடும், ரிங்கு சிங் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ரமந்தீப் சிங் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது வருகையைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் ரமந்தீப் சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களில் ஆட்டமிழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என்ன 107 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்டில் சிம்லனே, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ரிக்கெல்டன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் - கேப்டன் ஐடன் மார்க்ரம் ஆகியோரும் அதிரடியாக விளையாட முயற்சித்தனர். இதில் ஹென்றிக்ஸ் 21 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐடன் மர்க்ரம் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசன் - டேவிட் மில்லர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஒருபக்கம் ஹென்ரிச் கிளாசென் சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில், மறுபக்கம் அடுத்தடுத்து சிக்ஸர்களை அடிக்கு முயற்சியில் 18 ரன்களை எடுத்திருந்த டேவிட் மில்லர், பவுண்டரி எல்லையில் அக்ஸர் படேலின் அபாரமான கேட்ச்சின் மூலம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றுக்கு கடைசி மூன்று ஓவர்களில் 59 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்திருந்த ஹென்ரிச் கிளாசென் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். மேலும் அந்த விக்கெட்டின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வியும் இப்போட்டியில் உறுதியானது. இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத மார்கோ ஜான்சென், இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசிய நிலையில் அந்த ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் இறுதிவரை போராடியா மார்கோ ஜான்செ 16 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.