SA vs IND, 3rd T20I: குல்தீப் சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா; தொடரை சமன் செய்த இந்தியா!

Updated: Thu, Dec 14 2023 23:59 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அதிரடியாக தொடங்கிய ஷுப்மன் கில் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 60 ரன்கள் எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் தனது பங்கிற்கு ஒரு சிக்சருடன் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 7 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 100 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவும் விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தர்ப்பில் கேசவ் மகாராஜ், லிசாத் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், பர்கர், ஷம்ஸி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தனர். அந்த அணியின் தோடக்க வீரர்கள் மேத்யூ பிரீட்ஸ்கீ 4, ரீஸா ஹென்றிக்ஸ் 8 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களுக்கும், டோனவன் ஃபெரேரா 12 ரன்களிலும், பெஹ்லுக்வாயோ, கேச மகாராஜ், பர்கர், லிசாத் வில்லியம்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை இழக்கும் வாய்ப்பை தவிர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை