சதத்தை தவறவிட்டாலும் சாதனைப் படைத்த கேப்டன் கோலி!

Updated: Wed, Jan 12 2022 12:44 IST
Image Source: Google

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளைப் பெற்று சம பலத்துடன் உள்ளன.

இதனால் 1 – 1* என சமனில் இருக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை முடித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நேற்றைய போட்டிகளில் இதர இந்திய வீரர்கள் சொதப்பிய போதிலும் கேப்டன் விராட் கோலி தனி ஒருவனாக பேட்டிங் செய்தார், வழக்கத்தைவிட மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2ஆவது மெதுவான அரை சதத்தை அடித்தார்.

அத்துடன் கடந்த 2020 ஜனவரிக்கு பின் அவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை அடிக்க முடியாமல் திணறி வரும் அவர் நேற்றைய போட்டியில் சதம் எட்டும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார்.

நேற்றைய போட்டியில் 79 ரன்களை எடுத்த விராட் கோலி தென் ஆப்பிரிக்க மண்ணில் கேப்டனாக 1000 ரன்களை கடந்தார், இதன் வாயிலாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் எந்த இந்திய கேப்டனும் தென் ஆப்பிரிக்க மண்ணில் 1000 ரன்களை குவித்ததே கிடையாது.

அத்துடன் கிரிக்கெட் வரலாற்றில் 5 வெவ்வேறு நாடுகளில் 1000 ரன்களை குவித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இவர் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளில் கேப்டனாக 1000 ரன்களை விளாசி இந்த சாதனையை படைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை