சிறப்பாக செயல்படும் வீரர்களையே நாங்கள் உலககோப்பை அணிக்காக தேர்வு செய்வோம் - ஐடன் மார்க்ரம்!

Updated: Wed, Dec 13 2023 11:56 IST
Image Source: Google

ஐடன் மார்க்கம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்களை எடுத்திருந்த வேளையில் மழை பெய்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

அதை துரத்தி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், “இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு பந்துகளை பிடித்து விளையாடுகிறாரோ அதே அளவுக்கு அதிரடியாக ரன்களை குவிக்க முடியும்.

அந்த வகையில் ரிசா ஹென்ட்ரிக்ஸ் மிகச் சிறப்பான அதிரடியை எங்களுக்காக வழங்கினார். பேட்டிங் துறையில் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டது போல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியில் அவர் கொடுத்த துவக்கமே அதிரடியாக விளையாடி எங்களால் போட்டி முடிக்க முடிந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரானது இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் ஒவ்வொரு வீரருமே தங்களது இடத்திற்காக சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சிறப்பாக செயல்படும் வீரர்களையே நாங்கள் உலககோப்பை அணிக்காக தேர்வு செய்வோம். எனவே இது எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை