செஞ்சூரியன் வெற்றிக்கு இவர்களே காரணம் - விராட் கோலி பாராட்டு!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 327 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களை மட்டுமே அடித்தது.
அதனைத்தொடர்ந்து 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 174 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியானது 2ஆவது இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி,“இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற்றோம். இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். தென்னாப்பிரிக்க மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது கடினம். இருந்தாலும் இம்முறை நாங்கள் சரியான ஆட்டத்தை இங்கு விளையாடி உள்ளோம். டாஸ் வெற்றி பெற்று வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங் செய்வது என்பது ஒரு சவாலான முடிவுதான்.
இருப்பினும் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதனால் எங்களால் 300 மற்றும் 320 ரன்கள் குவித்தால் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். அதன்படி முதல் இன்னிங்சில் ரன்களும் கிடைத்தன. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். பும்ரா காயமடைந்து வெளியேறிய போது இந்திய அணிக்கு ஒரு 40 ரன்கள் எளிதாக சென்றன.
ஆனால் அவர் மீண்டும் அணிக்குள் வந்த போது இந்திய அணியின் பவுலிங் வேற லெவலில் இருந்தது. மொத்தமாக நமது அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றியை அப்படியே நமக்காக பெற்று தந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.