SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குயின்டன் டி காக் 8 ரன்களிலும், டெம்பா பவுமா 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத்தொடர்ந்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் கிளாசெனும் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேவிட் மில்லர் களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 126 பந்துகளில் 17 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 175 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த டேவிட் மில்லரும் 61 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க 8 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து தரப்பில் ஃபிரெட் கிளாசென், விவியன் கிங்மா, பால் வான் மீகெரென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.