SA vs PAK, 1st ODI: சைம் அயூப், சல்மான் ஆகா அசத்தல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி டி ஸோர்ஸியும், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரியான் ரிக்கெல்டனும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர்.
பின்னர் களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 8 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 88 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சென் 10 ரன்களிலும், ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ஹென்ரிச் கிளாசென் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 84 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பார்ட்மேன் 10 ரன்களையும், ரபாடா 11 ரன்களையும் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சல்மான் அலி அகா 4 விக்கெட்டுகளையும், அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தர். இதில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் அயூப்புடன் இணைந்த பாபர் ஆசாம் ஓரளவு தாக்குப்பிடித்து 23 ரன்களிலும், கேப்டன் முகமது ரிஸ்வான் ஒரு ரன்னிலும், காம்ரன் குலாம் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 60 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சைம் அயூப்புடன் இணைந்த சல்மான் அலி ஆகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
இப்போட்டியில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய சல்மான் ஆகாவும் தனது அரைசதத்தை கடந்தார். பின் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இர்ஃபான் கான் ஒரு ரன்னிலும், ஷாஹீன் அஃப்ரிடி ரன்கள் ஏதுமின்றியும் என சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுப்பினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த அப்துல்லா ஷஃபிக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 82 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் இலாக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சல்மான் அலி ஆகா ஆட்டநாயகன் விருதை வென்றார்.