பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!

Updated: Sun, Dec 29 2024 17:15 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம்  கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 89 ரன்களையும், அறிமுக வீரர் கார்பின் போஷ் 81 ர்னகளையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் குர்ராம் ஷஷாத் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்தது. இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பாபர் ஆசாம் 16 ரன்களுடனும், சௌத் ஷகீல் 8 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தின்ர். அதன்பின் 50 ரன்கள் எடுத்த கையோடு பாபர் ஆசாம் விக்கெட்டை இழக்க, இறுதிவரை விளையாடிய சௌத் சகீல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்களில் அமர் ஜமால் 18 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் 6 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 27 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஐடன் மார்க்ரம் 22 ரன்களுடனும், டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில் 37 ரன்களை எடுத்திருந்த ஐடன் மார்க்ரம் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் டெம்பா பவுமா ஒருபக்கம் சிறப்பாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாம் 14 ரன்களிலும், கைல் வெர்ரைன் 2 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களை எடுத்த கையோடு டெம்பா பவுமாவும் விக்கெட்டை இழந்தார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் வெற்றிபெற 49 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. அச்சமயத்தில் ஜோடி சேர்ந்த மார்கோ ஜான்சன் மற்றும் காகிசோ ரபாடா இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய காகிசோ ரபாடா 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களையும், மறுபக்கம் மார்கோ ஜான்சன் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறி சாதித்துள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை