SAW vs WIW: பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், இன்று தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியும் மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது.
இதனால் ஆட்டம் 41ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் சுனே லூஸ் 44 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பந்துவீசிய அனைவரும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியிலும் பேட்டர்கள் வருவதும் போவதுமாக விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் டொட்டின், செடின் நேஷன் ஆகியோர் பொறுப்பான அட்டத்தை வெளிப்படுத்தி 37, 35 ரன்களைச் சேர்த்தனர்.
இறுதியில் அந்த அணி வெற்றிபெற ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இறுதியில் இஸ்மெயில் வீசிய பந்தில் செல்மன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி சென்றது.
அதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி டொட்டினின் அதிரடியான ஆட்டத்தின் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் என 25 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி சூப்பர் ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.