எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸோர்ஸி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் பிரீட்ஸ்கியும் இணைந்த ஜேஜே ஸ்மட்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுதினார். அதன்பின் 26 ரன்களில் ஸ்மட்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் ஹென்ரிச் கிளாசென் 6 ரன்களுக்கும், மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களைத்தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரீட்ஸ்கியும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் 20 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே மற்றும் தாமஸ் கேபர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறக்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ரஸ்ஸி வேண்டர் டுசென் 19 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய எஸ்டெர்ஹூய்சன் 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த சாம் கரண் - டெவால்ட் ப்ரீவிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
இதில் சாம் கரண் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 38 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு ரன்னுக்கும், கேப்டன் கீரென் பொல்லார்ட் ரன்கள் ஏதுமின்றியும், ஜார்ஜ் லிண்டே 5 ரன்களுக்கும், ஒல்லி ஸ்டோன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் ப்ரீவிஸும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. டர்பன் அணி தரப்பில் நூர் அஹ்மத் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.