எஸ்ஏ20 2024: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!

Updated: Thu, Feb 01 2024 11:37 IST
Image Source: Google

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜோபர்க் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், ரீஸா ஹென்றிக்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து டேனியல் வோரால் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த லுயிஸ் டு ப்ளூய் - மேட்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் களமிறங்கினர். 

அதன்பின் லூயிஸ் டு ப்ளூய் 18 ரன்களுக்கும், மேட்சன் 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, கைல் சைமண்ட்ஸ், டொனவென் ஃபெரீரா, பிரேஸ்வெல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தன. இதனால் 15.2 ஓவர்களில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் டேனியல் வோரால், பேட்ரிக் க்ரூகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோர்டன் ஹெர்மன் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜொர்டன் ஹெர்மன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதான்பின் இணைந்த மாலன் - டாம் அபெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்களையும், டாம் அபெல் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 11 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணியும் நடப்பாண்டு எஸ்ஏ20 லீக் தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை