எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை 138 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!

Updated: Wed, Feb 07 2024 22:41 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலினேட்டர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜேசன் ராய் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் வானும் சாம் குக் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களை எடுத்திருந்த ஜேசன் ராயையும், வியான் லுபேவையும் நந்த்ரே பர்கர் தனது இரண்டாவது ஓவரில் வழியனுப்பிவைத்தார். இதனால் பார்ல் ராயல்ஸ் அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டேன் விலாஸ் - கேப்டன் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் டேன் விலாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பார்ல் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சாம் குக் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை